லாலு மகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: பாஜக விமர்சனத்துக்கு ஆர்ஜேடி பதிலடி!

"ஓபிசி பிரிவைச் சேர்ந்த 7 பேருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஆர்ஜேடி வழங்கியுள்ளது. இந்த விரக்தியில்தான் பாஜக ஏதேதோ பேசி வருகிறது."
லாலு பிரசாத் யாதவ் மகள் ரோஹிணி ஆச்சார்யா
லாலு பிரசாத் யாதவ் மகள் ரோஹிணி ஆச்சார்யாANI

லாலு பிரசாத் மகள் ரோகிணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதைக் கடுமையாக விமர்சித்து பேசிய பாஜகவுக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) பதிலடி கொடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் ஆர்ஜேடி சார்பில் போட்டியிட தனது மகள் ரோகிணி ஆச்சார்யாவுக்கு கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வாய்ப்பு வழங்கினார்.

இதை விமர்சித்துப் பேசிய பிஹார் துணை முதல்வரும், பாஜக தலைவருமான சாம்ராட் செளதுரி, "லாலு எதையும் இலவசமாக செய்யமாட்டார். மகள் ரோகிணி, லாலுவுக்கு சிறுநீரக தானம் செய்ததால்தான் அவருக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை அவர் வழங்கியுள்ளார்" என்றார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் சுபோத் குமார் மேத்தா, "துணை முதல்வர் பதவியில் உள்ள ஒருவருக்கு எப்படிப் பேசுவது, என்ன பேசுவது என்பதே தெரியவில்லை. அவரது பேச்சு கீழ்த்தரமாகவும் முன்யோசனை இல்லாமலும் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவைச் சேர்ந்த குஷ்வாஹா வகுப்பினர் 7 பேருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஆர்ஜேடி வழங்கியுள்ளது. இதற்குப் பதில் சொல்ல முடியாத பாஜகவினர் விரக்தியில் ஏதேதோ பேசிவருகின்றனர்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், "நான் லாலுவின் மகள். உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டுவந்த எனது தந்தைக்கு சிறுநீரகம் தானம் செய்வது எனது கடமையாகும். நான் தந்தைமீது அதிக பாசம் கொண்டவள். குடும்பத்தினருக்காவும், பிஹார் மாநிலத்துக்கும் என்னையே தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு லாலு பிரசாத் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in