ஹிமாச்சலில் 64-வது ஜனநாயக தினத்தைக் கொண்டாடிய திபெத்தியர்கள்
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தரம்சாலாவில் 64-வது ஜனநாயக தினத்தை நேற்று (செப்.02) கொண்டாடினார்கள் திபெத்தியர்கள்.
1959-ல் தலாய் லாமா இந்தியாவுக்கு வந்த பிறகு, செப்டம்பர் 2, 1960-ல் திபெத்திய நாடாளுமன்றம் நிறுவப்பட்டது. தலாய் லாமா தலைமையில் திபெத்திய நாடாளுமன்றம் முதன்முதலில் நிறுவப்பட்ட நிகழ்வைக் நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் திபெத்தியர்களால் செப்.02-ல் ஜனநாயக தினம் கொண்டாடப்படுகிறது.
திபெத் பகுதியை சீன அரசு ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, 14-வது தலாய் லாமாவுடன் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தனர். அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் அனைவருக்கும் அடைக்கலம் அளித்து ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் அவர்களை குடியமர்த்தினார்.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 02, 1960-ல் முதல்முறையாக 14-வது தலாய் லாமா தலைமையில் திபெத்திய நாடாளுமன்றம் நிறுவப்பட்டது. அப்போது புதிதாகத் தேர்தெடுக்கப்பட்ட திபெத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பீஹார் மாநிலத்தில் உள்ள புத்த கயாவில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டனர்.
64-வது ஜனநாயக தின கொண்டாட்டங்கள் தரம்சாலாவில் உள்ள முக்கிய புத்த ஆலயமான சுக்லாக்காங்கில் நடைபெற்றன. இதில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். திபெத்திய நாடாளுமன்றத்தில் 45 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.