
ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்ததுடன், விரைவான பதிலடியை கொடுத்ததற்காக இந்திய பாதுகாப்புப் படைகளை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
பிகானீர் நகரில் நடைபெற்ற விழாவில் இன்று (மே 22) பங்கேற்ற பிரதமர் மோடி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் மேம்படுத்தப்பட்ட 103 ரயில்நிலையங்களை திறந்துவைத்தார். அதை தொடர்ந்து, ரூ. 26,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்து, பொதுமக்களிடையே அவர் உரையாற்றினார்.
அப்போது, `பாகிஸ்தான் ஒரு விஷயத்தை மறந்துவிட்டது, பாரத தாயின் சேவகர் மோடி தற்போது இங்கே பெருமையுடன் நின்றுகொண்டிருக்கிறார். மோடியின் மனம் குளிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் அவரது ரத்தம் சூடாக இருக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் அல்ல, சூடான சிந்தூர் பாய்கிறது’ என்று பிரதமர் பேசினார்.
இந்தியாவுக்கு எதிரான நேரடிப் போரில் பாகிஸ்தானால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதால்தான் பயங்கரவாதத்தை அந்நாடு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்றும், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகான பல தசாப்தங்களாக இந்த உத்தி நடைமுறையில் உள்ளது என்றும், அவர் கூறினார்.
மேலும், `நமது சகோதரிகளின் குங்குமத்தை அழிக்க புறப்பட்டவர்கள், மண்ணில் புதையுண்டு போயுள்ளனர். இந்தியாவை ரத்தம் சிந்த வைத்தவர்கள் ஒவ்வொரு துளிக்கும் விலை கொடுத்திருக்கிறார்கள். இந்தியா அமைதியாக இருக்கும் என்று நினைத்தவர்கள் இப்போது வீடுகளில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்.
ங்கள் ஆயுதங்கள் குறித்துப் பெருமைப்பட்டவர்கள், இப்போது சொந்த இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து கிடக்கிறார்கள். நமது பாதுகாப்புப் படைகளின் தீரத்தால், பாகிஸ்தான் அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தாக்குதல் தொடங்கிய 22 நிமிடங்களுக்குள், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. நமது அரசாங்கம் முப்படைகளுக்கும் சுதந்திரம் அளித்தது. முப்படைகளும் உருவாக்கிய சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டது’ என்றார்.