ரயிலில் மாட்டிறைச்சியைக் கொண்டு சென்றதாகக் கூறி 72 வயது முதியவரைத் தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் பிணையில் வெளியே வந்துள்ளார்கள்.
மஹாராஷ்டிர மாநிலம் துலேவிலிருந்து அகாஷ் அவாத், நிதேஷ், ஜெயேஷ் மோஹிதே ஆகியோர் மும்பைக்கு ரயிலில் பயணித்துள்ளார்கள். இதே ரயலில் 72 வயது முதியவர் கல்யாணிலுள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக ஆகஸ்ட் 28 அன்று அதே ரயிலில் பயணித்துள்ளார். அப்போது, முதியவரை மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கூறி தாக்கியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 31 அன்று ரயில்வே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், ரயில்வே காவல் துறையினர் பிணையில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்யவில்லை.
கைது செய்யப்பட்ட அனைவரும் காவல் துறைக்கான தேர்வில் பங்கேற்பதற்காக மும்பை சென்றுள்ளார்கள். மும்பையில் தேர்வை முடித்துவிட்டு மீண்டும் துலே நகருக்குச் சென்ற இவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.
தானே மாவட்டத்திலுள்ள ரயில்வே நீதிமன்றத்தில் இவர்கள் மூவரும் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்கள். இங்கு இவர்களுக்கு ஒரேநாளில் பிணை கிடைத்துள்ளது.