
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது சென்னை ஐஐடி.
உ.பி. மாநிலத்தின் வாரணாசியுடன் (காசியுடன்) தமிழர்களுக்கு உள்ள நூற்றாண்டு காலக் கலாச்சாரத் தொடர்பை வெளிப்படுத்தி அதை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2022-ல் முதல்முறையாக `காசி தமிழ்ச் சங்கமம்’ தொடங்கப்பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி, சுமார் ஒரு மாத காலம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 2023-ல் 2-வது முறையாக காசி தமிழ்ச் சங்கமம் வாரணாசியின் நமோ காட் (படித்துறை) பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில், மூன்றாவது முறையாகக் கடந்த 2024 நவம்பரில் நடக்கவிருந்த காசி தமிழ்ச் சங்கமம் அப்போது ஒத்திவைக்கப்பட்டது.
2025 ஜனவரியில் வாரணாசிக்கு அருகிலுள்ள பிரயாக்ராஜில் நடைபெறவிருக்கும் கும்பமேளாவைக் காணும் வகையில் இதை ஒத்திவைப்பதாக அப்போது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜன.13-ல் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, 3-வது காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது சென்னை ஐஐடி. இதில் கலந்துகொள்பவர்கள் வாரணாசியுடன், அயோத்தி மற்றும் பிரயாக்ராஜுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
3-வது காசி தமிழ்ச் சங்கமம் இன்று (பிப்.15) தொடங்கி, வரும் பிப்.24 வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் http://kashitamil.iitm.ac.in என்கிற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.