
தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலைக் கைது செய்து விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
தில்லி சிறப்பு நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வு நீதிபதி கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து, கெஜ்ரிவால் சிபிஐயால் முறைப்படி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் சிபிஐ-க்கு அனுமதி வழங்கியுள்ளது.
கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை குறித்து அவருடைய மனைவி சுனிதா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20 அன்று பிணை வழங்கப்பட்டது. உடனடியாக அமலாக்கத் துறை இதற்குத் தடைகோரி பெற்றது. அடுத்த நாளே சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவாலைக் குற்றவாளி ஆக்கியது. இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன. இது சட்டம் அல்ல. இது சர்வாதிகாரம், அவசர நிலை பிரகடனம்" என்று சுனிதா கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.