கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

கூட்டணி மாறுவதுதான் நிதிஷ் குமாரின் அரசியல் வழக்கம்: பிரசாந்த் கிஷோர்

காலை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதிஷ் குமார், மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவுடன் 9-வது முறையாக பிகார் முதல்வராகப் பதவியேற்றார்.
Published on

கூட்டணி மாறுவது நிதிஷ் குமாரினுடைய அரசியல் வழக்கமாகிவிட்டதாக அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

மெகா கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், காலை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவுடன் 9-வது முறையாக பிகார் முதல்வராகப் பதவியேற்றார்.

இதனிடையே பிகாரில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாரின் முடிவை விமர்சித்து பேசினார்.

அவர் கூறியதாவது:

"பிகாரிலுள்ள தலைவர்கள் அனைவரும் அணி மாறுபவர்களாக உள்ளார்கள் என்பதற்குத் தற்போது நடந்து வரும் நிகழ்வுகளே சாட்சி. நிதிஷ் குமார் எப்போது வேண்டுமானாலும் அணி மாறுவார் என்பதை நான் தொடக்கம் முதலே கூறி வருகிறேன். இது அவருடைய அரசியலாகவே மாறிவிட்டது. அவர் அணி மாறிக்கொண்டே இருப்பவர். ஆனால், நிதிஷ் குமார் மட்டுமல்ல. பாஜக மற்றும் அனைத்துத் தலைவர்களுமே அணி மாறுபவர்கள்தான் என்பதற்கு இதுவே சாட்சி.

பல விவகாரங்களில் நிதிஷ் குமாரை விமர்சித்தவர்கள் இன்று அவரை வரவேற்கிறார்கள். நல்ல நிர்வாகத் திறன் உடையவர் என நேற்று வரை அவரைப் பாராட்டியவர்கள், இன்று முதல் அவரை விமர்சிக்கத் தொடங்குவார்கள்" என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in