ஜம்மு காஷ்மீரில் இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு

முதல் கட்ட வாக்குப்பதிவில் 61.38 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகின.
ஜம்மு காஷ்மீரில் இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு
ANI
1 min read

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலின் மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்.1) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11.60 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா, குப்வாரா, பந்திபோரா, உதம்பூர், கத்துவா, சம்பா, ஜம்மு என 7 மாவட்டங்களில் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கடந்த செப்.18-ல் முதல் கட்டமாகவும், செப்.25-ல் இரண்டாம் கட்டமாகவும் ஜம்மு காஷ்மீரின் 14 மாவட்டங்களில் உள்ள 50 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றன. முதல் கட்ட வாக்குப்பதிவில் 61.38 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகின.

10 வருடங்கள் கழித்து நடைபெறும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் 3 முனைப்போட்டி நிலவுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள 28 தொகுதிகளைத் தவிர்த்துவிட்டு, 62 தொகுதிகளில் மட்டும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது பாஜக.

இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 51 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 32 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதியும், ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன. உடன்பாடு எட்டப்படாத 5 தொகுதிகளில் காங்கிரஸும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியும் தனித்துப் போட்டியிடுகின்றன.

மேலும் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 63 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவுபெற்றதும், அக்.8-ல் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in