2026-க்குள் அஸ்ஸாம் காங்கிரஸில் ஹிந்துக்கள் இருக்க மாட்டார்கள்: அஸ்ஸாம் முதல்வர்

"2032-க்குள் அந்தக் கட்சியிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் கட்சியிலிருந்து வெளியேறிவிடுவார்கள்."
பாஜகவில் புதிதாக இணைந்தவர்களுடன் அஸ்ஸாம் முதல்வர்
பாஜகவில் புதிதாக இணைந்தவர்களுடன் அஸ்ஸாம் முதல்வர்ANI

2026 ஆம் ஆண்டில் அஸ்ஸாம் காங்கிரஸில் ஹிந்துக்கள் இருக்க மாட்டார்கள் என்று அந்த மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

குவாஹாட்டியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்த கூட்டம் மற்றும் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா இந்தக் கூட்டங்களில் பங்கேற்றார்.

ஹிமந்த விஸ்வ சர்மா பேசியதாவது:

"2026-ல் அஸ்ஸாம் காங்கிரஸில் ஹிந்துக்களே இருக்க மாட்டாரகள். 2032-க்குள் அந்தக் கட்சியிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் கட்சியிலிருந்து வெளியேறிவிடுவார்கள்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவர் பாஜகவில் சேர்ந்துள்ளனர். மேலும் சிலர் பாஜகவில் இணைய ஆர்வமாக உள்ளனர். மஜுலியில் திங்கள்கிழமை சைக்கிள் பேரணியைத் துவக்கி வைத்து நான் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன்.

முஸ்லிம் சமூகத்தினரை சீர்திருத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். முஸ்லிம் இளைஞர்கள் பலர் என்னை ஆதரிக்கிறார்கள். இதை நீங்கள் முகநூல் பக்கத்தில் பார்க்கலாம். யாரும் என்னை எதிர்க்கவில்லை.

ஜோர்ஹட் மக்களவைத் தொகுதியில் நிச்சயம் பாஜக வெற்றிபெறும். ஒருசிலர் எனக்கு எதிரான சூழலை உருவாக்க முயற்சித்து வருகிறார்கள். ஆனால், உண்மைநிலை மாறுபட்டது.

காங்கிரஸ் வேட்பாளர் கெளரவ் கோகோய்க்கு நெருக்கமான இருவர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளனர். ஏனெனில், காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 105 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது. அரசு செய்துள்ள வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in