
நம் நிலைகளைக் குறிவைப்பது என்பது கடினம் என டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய முப்படை அதிகாரிகள் தில்லியில் திங்கள்கிழமை கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய், ஏர் மார்ஷல் ஏக பாரதி, வைஸ் அட்மைரல் ஏஎன் பிரமோத் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்தார்கள்.
ஏர் மார்ஷல் ஏக பாரதி கூறியதாவது:
"பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தான் நாம் சண்டையிட்டோம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு உதவ முடிவு செய்து இதில் தலையிட்டது. எனவே, நாம் பதிலடி கொடுக்க நேர்ந்தது.
நம் உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசின் நிதி மற்றும் கொள்கை ரீதியான ஆதரவால் மட்டுமே திறன்மிக்க வான் பாதுகாப்பு சூழலை ஒருங்கிணைத்து செயல்பட முடிந்தது. நம் அனைத்து ராணுவ நிலைகள் மற்றும் நம் அமைப்புகள் அனைத்தும் முழுமையாகச் செயல்படவுள்ளன" என்றார் ஏர் மார்ஷல் ஏகே பாரதி.
டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய் கூறுகையில், "கடந்த சில வருடங்களாக பயங்கரவாதச் செயல்களின் குணாதிசயம் மாறிவிட்டது. அப்பாவி மக்கள் குறிவைக்கப்படுகிறார்கள். நம் பாதுகாப்பு அமைப்புகள் பல அடுக்கு நிலைகளைக் கொண்டுள்ளன. எனவே, நம் நிலைகளைக் குறிவைப்பது மிகக் கடினமானது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளார். எனக்குப் பிடித்தவர்களில் ஒருவர் கோலி. 1970-களில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஆஷஸில் இரு ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்டிங் வரிசையை துவம்சம் செய்வார்கள். அப்போது ஆஸ்திரேலியா பழமொழி ஒன்றைக் கூறி தாம்சன் வீழ்த்தவில்லையென்றால், லில்லி வீழ்த்துவார் என்று விளக்கம் கொடுக்கும். நம் பாதுகாப்பு அடுக்கு நிலைகளைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். இந்த அமைப்பிலுள்ள ஏதேனும் ஒரு நிலையிலிருந்து தப்பித்தால் மற்றொன்று தாக்கி அழித்துவிடும். இந்த இடத்தில் எல்லை பாதுகாப்புப் படையினருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். நம் திட்டத்தில் எல்லா வீரர்களும் பங்களித்துள்ளார்கள்" என்றார்.