ரயில் டிக்கெட் விலை டிச. 26 முதல் உயர்வு: ரயில்வே அமைச்சகம் | Train Fare |

சாதாரண வகுப்புகளில் 215 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்கள் கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதலாக...
ரயில் டிக்கெட் விலை டிச. 26 முதல் உயர்வு: ரயில்வே அமைச்சகம்
ரயில் டிக்கெட் விலை டிச. 26 முதல் உயர்வு: ரயில்வே அமைச்சகம்ANI
1 min read

ரயில் பயண டிக்கெட் விலையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், அது டிசம்பர் 26 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரயில் பயணக் கட்டணத்தை உயர்த்துவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தற்போதும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே புதிய பயணக் கட்டணத் திருத்தங்களை அறிவித்துள்ளது.இதன் மூலம் சுமார் ரூ. 600 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட ரயில்வே இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சாதாரண பயணிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களை அதிகம் பாதிக்காத வகையில் இந்த கட்டண அமைப்பு இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய விதிகளின்படி, சாதாரண வகுப்புகளில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்கள் கிலோ மீட்டருக்கு 1 பைசா கூடுதலாக செலுத்த வேண்டும். மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏசி அல்லாத வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 215 கிலோ மீட்டருக்குள் பயணம் செய்பவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயின் இயக்கச் செலவுகள் அதிகரித்ததால் இந்தக் கட்டணத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. தற்போது ஊழியர் சம்பளத்திற்கு மட்டும் ரூ.1.15 லட்சம் கோடியும், ஓய்வூதியத்திற்கு ரூ. 60,000 கோடியும் செலவிடப்படுகிறது. 2024–25 நிதியாண்டில் மொத்த இயக்கச் செலவு ரூ.2.63 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இந்த நிதிச் சுமையை சமாளிக்க பயணக் கட்டணங்களில் சிறிய மாற்றங்கள் அவசியமானதாக உள்ளன. பயணக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டாலும், சரக்கு போக்குவரத்துக் கட்டணங்களில் எந்த உயர்வும் இல்லை என்றும் ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “ரயில்வே அமைச்சகத்தின் இந்தச் செய்திக் குறிப்பு அதிகாரப்பூர்வமாக இல்லாமல் ஊடகங்களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு ரகசியமாக வெளியிட்டு, அங்கீகரிக்கப்படாத வகையில் அரசு அதனைச் செயல்படுத்த நினைக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

Summary

The Railway Ministry has announced new changes in train ticket prices, which will come into effect from December 26.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in