வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம்: பினராயி விஜயன்

வாடகை வீட்டுக்குக் குடியேறும் குடும்பங்களுக்கு தலா ரூ. 6,000 மாதந்தோறும் வழங்கப்படும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30 அன்று முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 226-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அறிவித்தார்.

"வாடகை வீட்டுக்குக் குடியேறும் குடும்பங்களுக்கு தலா ரூ. 6,000 மாதந்தோறும் வழங்கப்படும். உறவினர்கள் வீட்டுக்குக் குடியேறினாலும், இது பொருந்தும். நிலச்சரிவில் சிக்கியவர்களில் 233 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 206 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 118 பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இதில் ரூ. 4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், ரூ. 2 லட்சம் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் வழங்கப்படும். 60% இயல்பாகச் செயல்பட முடியாத அளவுக்குக் காயமடைந்தவர்களுக்கு ரூ. 75,000 மற்றும் 40 முதல் 60% வரை இயல்பாகச் செயல்பட் முடியாத அளவுக்குக் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும்.

கூடுதலாக, நிலச்சரிவில் சிக்கி தீவிரக் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். இந்த நிவாரண நிதி அனைத்தும் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்" என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in