
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நடுத்தர வர்க்கத்துக்கு துரோகம் இழைத்துவிட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார்.
"நாட்டில் பயம் கலந்த சூழல் நிலவி வருகிறது. பாஜகவில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், பிரதமராவது குறித்து ஒருவர் கனவு காணலாம். பாதுகாப்புத் துறை அமைச்சர் அதே கனவைக் கண்டால் அது பிரச்னை. அதுதான் பயம். நாடு முழுக்க இந்தப் பயம் பரவியுள்ளது. இந்தப் பயம் ஏன் மிகவும் ஆழமாகப் பரவியுள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கையைத் தயாரித்த 20 அதிகாரிகளில் இருவர் மட்டுமே சிறுபான்மை மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களைச் சேர்ந்தவர்கள். அல்வா வழங்கும் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இவர்கள் இருவரும் இடம்பெறக்கூடவில்லை.
மத்திய நிதிநிலை அறிக்கை தாமரை வடிவிலான இந்த சக்கரவியூகத்தின் பலத்தை வலுவிழக்கச் செய்யும் என்று எதிர்பார்த்தேன். விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், சிறு தொழில் செய்பவர்களுக்கு உதவும் வகையில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்த்தேன். சிறு தொழில்களைக் கடுமையாகப் பாதித்த வரி பயங்கரவாதம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
பாஜக அரசு நடுத்தர வர்க்கத்துக்கு துரோகம் இழைத்துவிட்டது.
சக்கரவியூகத்தின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது. சக்கரவியூகம் 3 படைகளைக் கொண்டுள்ளது.
1. நாட்டின் ஒட்டுமொத்த வளத்தையும் இருவர் மட்டுமே உரிமம் கொண்டாட வேண்டும். சக்கரவியூகத்தின் ஒரு அம்சம் பொருளாதாரத்தின் அதிகாரத்திலிருந்து வருகிறது.
2. சிபிஐ, அமலாக்கத் துறை, தகவல் தொழில்நுட்பம் என நாட்டின் அமைப்புகளை தன்வசப்படுத்துவது.
3. மூன்றாவது அரசியல் நிர்வாகம்.
இவை மூன்றுதான் சக்கரவியூகத்தின் முக்கியமானதாக உள்ளன. இவை நாட்டை சீரழித்துள்ளன.
வினாத் தாள் கசிவு இளைஞர்களைப் பெருமளவில் பாதிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுக்க வினாத் தாள் கசிவு என 70 சம்பவங்கள் உள்ளன. ஆனால், நிதியமைச்சர் தனது உரையில் அதுபற்றி எதையும் குறிப்பிடவில்லை. அதானி மற்றும் அம்பானியைப் பாதுகாக்க பிரதமர் விரும்புகிறார். இதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி செய்யாததை விவசாயிகளுக்காக நாங்கள் செய்வோம். மக்களவையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான மசோதாவை நிறைவேற்றுவோம்" என்று பேசி வருகிறார் ராகுல் காந்தி.
அதானி, அம்பானி பெயர்களைக் குறிப்பிடக் கூடாது என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியதைத் தொடர்ந்து, இருவரையும் ஏ1, ஏ2 எனக் குறிப்பிட்டு பேசினார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் உரைக்கு மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.