ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் நேற்று (அக்.08) தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திவந்த ராணுவ வீரர்களில், இருவரைக் கடத்திச் சென்றனர் தீவிரவாதிகள்.
தீவிரவாதிகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் நேற்று இந்திய ராணுவத்தின் 161-வது பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் என்கவுன்டரில் ஈடுபட்டுவந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக இரு ராணுவ வீரர்களைக் கடத்திச் சென்றனர் தீவிரவாதிகள்.
தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களில் ஒருவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த ராணுவ வீரருக்கு குண்டடிபட்டுள்ளது. இருந்தும் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய அந்த ராணுவ வீரர் மீட்கப்பட்டு, அவருக்கு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட மற்றொரு ராணுவ வீரரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர் இராணுவத்தினர். இதனை அடுத்து அந்த இரண்டாவது இராணுவ வீரரின் உடல் குண்டடி காயங்களுடன் அனந்தநாக்கின் பத்ரிபால் காட்டுப் பகுதியில் ராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இந்த சம்பவங்களை தொடர்ந்து, தீவிரவாதிகளை தீவிரமாக தேடும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே சம்பவத்தைப் போல, அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டில் இரு ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கும் முன்பு டோடா மாவட்டத்தில் 4 இராணுவ வீரர்களும், ஒரு காவல்துறை அதிகாரியும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.