
1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்தியாவில் இருந்த மத வழிபாட்டிடங்களின் நிலையில், எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடருவதை உறுதிசெய்யும் நோக்கில் 1991-ல் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்துவாராக்கள், மடாலயங்கள் என இந்தியாவில் உள்ள மத வழிபாட்டிடங்கள் சுதந்திரத்தின்போது எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலை தொடர இந்த சட்டம் வழிவகை செய்தது.
மேலும், நாடு சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து நிலுவையில் இருந்த காரணத்தால், ராம ஜென்ம பூமி-பாபர் மசூதி உரிமையியல் வழக்கிற்கு மட்டும் இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டத்தின் சில பிரிவுகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தும், சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும் கடந்த 2020-ல் இருந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளின் விளக்கங்களை மாற்றி அமைக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அதேநேரம், மூத்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய உள்ளிட்ட சிலர் இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழங்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை கடந்த ஜூலை 2023-ல் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். 31 அக். 2023 வரை கால அவகாசம் வழங்கியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், இந்த வழக்குகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில், நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அமர்வின் விசாரணை வரும் டிசம்பர் 12-ல் தொடங்கும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.