தெலங்கானா சுரங்க விபத்து: 16 நாள்களுக்குப் பிறகு ஓர் உடல் மீட்பு

மேற்கூரை இடிந்து விழுந்ததால், சுரங்கத்தில் இடிபாடுகள் இருப்பது மற்றும் நீர்க் கசிவு காரணமாக சிக்கிக்கொண்டவர்களை மீட்பது சவாலாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
தெலங்கானா சுரங்க விபத்து: 16 நாள்களுக்குப் பிறகு ஓர் உடல் மீட்பு
ANI
1 min read

தெலங்கானாவில் 16 நாள்களுக்கு முன் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 8 பேர் சிக்கிக்கொண்ட நிலையில், ஒருவருடைய உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தும் வகையில் `ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய்’ கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கால்வாய்க்காக ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள தோம்மலபென்டா என்ற இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி பிப்ரவரியில் தொடங்கியது.

பிப்ரவரி 22 அன்று, சுரங்கத்திற்கு உள்ளே 14-வது கிலோ மீட்டரில் சுமார் 3 மீட்டர் அளவுக்கு சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் எஞ்சினியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 8 பேர் சிக்கிக்கொண்டார்கள்.

தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவத்தின் பைசன் பிரிவு மற்றும் 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகண்டின் சில்க்யாரா பெண்ட்-பார்கோட் சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்ட மீட்புக் குழுவினர் உள்ளிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்நிலையில் 16 நாள்களுக்குப் பிறகு சிக்கிக்கொண்ட 8 பேரில் ஒருவருடைய உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டுள்ள உடல் யாருடையது என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

மேற்கூரை இடிந்து விழுந்ததால், சுரங்கத்தில் இடிபாடுகள் இருப்பது மற்றும் நீர்க் கசிவு காரணமாக சிக்கிக்கொண்டவர்களை மீட்பது சவாலாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, தெலங்கானா அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ் கடந்த பிப்ரவரி 24 அன்று கூறுகையில்,

"உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக மிக மிக குறைவு. ஏனென்றால், சுரங்கம் இடிந்த பகுதிக்கு 50 மீட்டர் முன்பு வரை நானே சென்றேன். புகைப்படம் எடுத்தபோது, சுரங்கத்தின் முடிவு தெரிந்தது.

சுரங்கப்பாதையின் 30 அடியில், ஏறத்தாழ 25 அடி வரை சேறு குவிந்துள்ளது. அவர்களின் பெயர்களை நாங்கள் சத்தமாக அழைத்துப் பார்த்தோம். எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. எனவே (அவர்கள் பிழைத்திருப்பதற்கான) வாய்ப்பு இல்லை" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in