ரோஹித் வெமுலா வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்: தெலங்கானா டிஜிபி

"இன்று முதல்வரைச் சந்திக்க வந்தோம். நியாயமான முறையில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்." - ராதிகா வெமுலா
ரோஹித் வெமுலா வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்: தெலங்கானா டிஜிபி
ANI

ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என அந்த மாநில காவல் துறை இயக்குனர் (டிஜிபி) தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலா 2016-ல் தற்கொலை செய்து கொண்டார். தலித் மாணவரான இவருக்கு எதிராகப் பல்கலைக்கழக நிர்வாகத்திலிருந்து கடுமையான அழுத்தங்கள் வந்துள்ளன. ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் நாடு முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது. உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அச்சுறுத்தல்கள் பேசுபொருளாகின.

இந்த வழக்கை விசாரித்து வந்த தெலங்கானா காவல் துறை, வழக்கை முடித்து வைத்ததாக நேற்று அறிவித்தது. காவல் துறையின் இறுதி அறிக்கையில், ரோஹித் வெமுலா தலித் வகுப்பைச் சாராதவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் வெமுலா தற்கொலைக்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. ஒற்றுமைக்கான நடைப்பயணத்தின்போது ராகுல் காந்தி இவரது குடும்பத்தினரைச் சந்தித்திருக்கிறார்.

எனினும், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள நிலையிலும், ரோஹித் வெமுலாவுக்கு எதிராகக் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்தது பேசுபொருளானது.

இந்த நிலையில், ரோஹித் வெமுலாவின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று தெலங்கானா டிஜிபி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையில் ரோஹித் வெமுலாவின் தாய் மற்றும் உறவினர்கள் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளதால், இந்த வழக்கானது மீண்டும் விசாரிக்கப்படும். இதுதொடர்பாக, மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

வழக்கின் விசாரணை அதிகாரி மாதாபூர் துணைக் காவல் ஆணையர். இறுதி அறிக்கை கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று தெலங்கானா டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "2018-க்கு முன்பு நடந்த சம்பவங்களைக் கொண்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு, விசாரணை நடைபெறவில்லை. இன்று முதல்வரைச் சந்திக்க வந்தோம். நியாயமான முறையில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.

ரோஹித் வெமுலாவுடன் இடைநீக்கம் செய்யப்பட்ட மற்ற மாணவர்களின் வழக்கு குறித்தும் பேசினோம். வழக்குகள் காரணமாக அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஆராய்ச்சி மாணவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். அந்த வழக்குகள் குறித்தும் கவனத்தில் எடுத்துக்கொள்வதாக முதல்வர் உறுதியளித்தார். இந்த அரசு எங்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என நம்புகிறோம்" என்றார் ராதிகா வெமுலா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in