தொகுதி மறுசீரமைப்பு: தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

"தெலங்கானா சட்டப்பேரவைத் தொகுதிகள் எண்ணிக்கையை 119-ல் இருந்து 153 ஆக உடனடியாக உயர்த்தப்பட வேண்டும்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

தொகுதி மறுசீரமைப்பை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என தெலங்கானா சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றும் முதல் மாநிலம் தெலங்கானா.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு சென்னையில் கடந்த 22 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு விடுத்த அழைப்பை ஏற்று ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். கேரளம், தெலங்கானா, பஞ்சாப் சார்பில் அம்மாநில முதல்வர்கள் முறையே பினராயி விஜயன், ரேவந்த் ரெட்டி, பகவந்த் மான் கலந்துகொண்டார். கர்நாடகம் சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொண்டார்.

"மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பட்சத்தில், அதை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகள் உள்பட அனைத்து மாநிலங்களின் அரசியல் கட்சிகளுடையக் கருத்தைக் கேட்டறிந்து தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். 1971 மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை மேற்கொண்டு 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இதற்கான உரிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள தலைவர்கள், இதுதொடர்பாக தங்களுடைய மாநில சட்டப்பேரவைகளில் உரிய தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்புக் எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் முன்மொழியப்பட்டது.

"தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து மாநில அரசுகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளிடம் விரிவான ஆலோசனை மேற்கொண்டு தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் அவை வலியுறுத்துகிறது. நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிக்காமல் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லையை மட்டும் மறுசீரமைப்பு செய்யலாம்" என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், "ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014-ன் படி தெலங்கானா சட்டப்பேரவைத் தொகுதிகள் எண்ணிக்கையை 119-ல் இருந்து 153 ஆக உடனடியாக உயர்த்தப்பட வேண்டும். இதுதொடர்பாக உரிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களை மத்திய அரசு அறிமுகம் செய்ய வேண்டும் என அவை வலியுறுத்துகிறது" என்பதும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் தெலங்கானா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in