
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பிஹாரில், நேற்று (ஆக. 1) வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று (ஆக. 2) குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தேஜஸ்வி யாதவின் விவரங்களைப் பகிர்ந்த தேர்தல் ஆணையம், `விஷமத்தனமான கூற்று’ என்று கூறி, குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
பிஹார் தலைநகர் பட்னாவில் இன்று (ஆக. 2) நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ் தனது தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணைக் காண்பித்து, அதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலியில் பதிந்தார், அதன்பிறகு அதில் `பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை’ என்று காண்பித்தது.
இதைத் தொடர்ந்து, `எனது பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. நான் எப்படி தேர்தலில் போட்டியிடுவேன்?’ என்று தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
யாதவின் கூற்றைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அவரது விவரங்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலின் நகலை வெளியிட்டது. பட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அவரது பெயர் பட்டியலிடப்பட்டிருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியது.
`தனது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று ஒரு விஷமத்தனமான கூற்றை தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அவரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 416-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, அவரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று கூறும் எந்தவொரு கூற்றும் தவறானது’ என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.
அதேநேரம், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண் யாதவ் பகிர்ந்து கொண்ட எண்ணிலிருந்து வேறுபட்டது.