
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கை பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
இதற்கிடையே மாநிலத்தின் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பதாக குறிப்பிட்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று (ஆக. 10) குற்றம்சாட்டினார்.
மாநிலத்தில் உள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் பாஜகவைச் சேர்ந்த விஜய் குமார் சின்ஹாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அவை இரண்டிலும் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்கள் வேறுபடுவதாகவும் அவர் விவரங்களை வெளியிட்டார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய யாதவ், `விஜய் குமார் சின்ஹா இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள இரண்டு வெவ்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர். அவரது பெயர் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள லக்கிசராய் சட்டப்பேரவைத் தொகுதியிலும், பட்னா மாவட்டத்தின் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியிலும் உள்ளது’ என்றார்.
மேலும், `அவரிடம் இரண்டு வெவ்வேறு தேர்தல் புகைப்பட அடையாள அட்டைகள் உள்ளன. ஆச்சரியப்படும் விதமாக, பிஹாரில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்ட பிறகு இது நடந்துள்ளது.
சின்ஹா அல்லது தேர்தல் ஆணையம் யார் இதில் பொறுப்பேற்க வேண்டும்? சின்ஹா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? இந்த தகவல்கள் வெளியான பிறகு அவர் (சின்ஹா) எப்போது பதவியை ராஜினாமா செய்வார்?’ என்று தேஜஸ்வி யாதவ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் துணை முதல்வர் சின்ஹா கூறியதாவது,
`முன்னதாக, பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஏப்ரல் 2024-ல் லக்கிசராய் தொகுதியில் எனது பெயரைச் சேர்க்க விண்ணப்பித்திருந்தேன். அத்துடன் பங்கிபூரில் இருந்து எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்குவதற்கான படிவத்தையும் நிரப்பினேன்.
என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. ஏதோ காரணத்தால், பங்கிபூரில் இருந்து எனது பெயர் நீக்கப்படவில்லை, அது வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது. நான் (சம்மந்தப்பட்ட) பூத் அதிகாரியை அழைத்து எழுத்துப்பூர்வமாக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, பங்கிபூரில் இருந்து எனது பெயரை நீக்கக் கோரும் ரசீதைப் பெற்றேன். என்னிடம் இரண்டு ஆவணங்களும் உள்ளன’ என்றார்.