
பொறுப்பற்ற நடத்தை, குடும்ப மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தியது போன்ற காரணங்களுக்காக, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக இன்று (மே 25) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தன் முகநூலில் கணக்கில் வெளியிட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பதிவுக்குப் பிறகு, இந்த நீக்கம் நடந்தேறியுள்ளது. அனுஷ்கா யாதவ் என்பவருடன் தனக்கு உள்ள நீண்டகால உறவை நேற்று (மே 24) அறிவித்த தேஜ் பிரதாப், தாங்கள் இருவரும் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறினார்.
இதை ஒட்டி, தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து 6 வருடங்களுக்கு நீக்குவதாக சமூக ஊடகப் பதிவு மூலம் அறிவித்த லாலு பிரசாத் யாதவ், `தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்க நெறிமுறைகளைப் புறக்கணிப்பது, சமூக நீதிக்கான கட்சியின் கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் என்றும், தேஜ் பிரதாப்பின் நடத்தை குடும்பத்தின் விழுமியங்களுக்கு ஏற்ப இல்லை’ என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2018-ல் பிஹாரின் முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் பேத்தியான ஐஸ்வர்யா ராயை, தேஜ் பிரதாப் மணந்தார். ஆனால் இருவரும் விவகாரத்து கோரிய வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால்தான் 2013 முதல் அனுஷ்கா யாதவை காதலித்து வருவதாக தேஜ் பிரதாப் யாதவ் நேற்று அறிவித்தது சர்ச்சையானது.
இந்த விவகாரம் தொடர்பான தேஜ் பிரதாப்பின் தம்பியும், பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, `ஒருவர் தனது அரசியல் வாழ்வையும், தனிப்பட்ட வாழ்வையும் தனித்தனியாக வைத்திருக்கவேண்டும்’ என்று அவர் கூறினார்.