
12 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய டிசிஎஸ் முடிவு செய்துள்ளதற்கு எதிராக ஐடி ஊழியர்கள் சங்கம் மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் கிரித்திவாசன் ஞாயிறன்று மனிகன்ட்ரோல் ஊடகத்துக்குப் பேட்டியளித்தார். அதில், "உலகளவில் மொத்தமுள்ள ஊழியர்களில் 2 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட நேரிடும்" என்று அவர் கூறியிருந்தார்.
ஜூனில் நிறைவடைந்த காலாண்டின்படி, டிசிஎஸ் நிறுவனத்தில் மொத்தம் 6,13,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 2 சதவீதம் என்று கணக்கிட்டால், ஏறத்தாழ 12,200 ஊழியர்கள். எனவே, 12,200 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய டிசிஎஸ் முடிவு செய்துள்ளது.
நிரந்தர ஊழியர்கள் 12 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதை உறுதி செய்யும் வகையில் டிசிஎஸ் நிர்வாகம் சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப உலகில் இச்செய்தி பேரிடியாக விழுந்தது. இந்நிலையில், ஐடி ஊழியர்கள் சங்கம் (என்ஐடிஇஎஸ்) சார்பில் டிசிஎஸ்-ன் பணிநீக்க முடிவை எதிர்த்து மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு டிசிஎஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று ஐடி ஊழியர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வலுக்கட்டாயமாகப் பணியிலிருந்து நீக்கப்படுவது, தாமதமாக வேலைக்கு எடுப்பது, சட்டவிரோதமாக ஆட்குறைப்பு செய்வது குறித்து விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் ஐடி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
என்ஐடிஇஎஸ் தலைவர் ஹர்பிரீத் சிங் சலுஜா தனது மனுவில், "நிறுவனத்துக்காக 10 முதல் 20 ஆண்டுகள் வரை விஸ்வாசமாக உழைத்த மத்திய மற்றும் உயர்நிலை ஊழியர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முன் அறிவிப்பு எதுவும் இன்றி, முறையாக எவ்விதத் தகவலுமின்றி ஞாயிறு மாலை மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அரசிடமும் தகவல் தெரிவிக்காமல் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்க டிசிஎஸ் முடிவு செய்துள்ளது. இவை அனைத்தும் தொழிலாளர் சட்டத்தின்படி சட்டவிரோதமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
TCS | Tata Consultancy Services | Job Cut | AI |