இந்தியாவில் ஜாம்ஷெட்பூருக்கு அடுத்து ஒசூரில் புதிய தொழில் நகரத்தை உருவாக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புதிய மின்னணு தொழில் நகரை உருவாக்கத் திட்டமிட்டமிட்டுள்ளது டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம். 1908-ல் அன்றைய பீஹார் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் தன் முதல் உருக்காலைக்கான கட்டுமானப் பணியைத் தொடங்கியது டாடா நிறுவனம். 1912-ல் ஜாம்ஷெட்பூரின் முதல் உருக்காலை பயன்பாட்டுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து ஜாம்ஷெட்ஜி டாடாவின் வழிகாட்டுதலில், இந்தியாவின் முதல் திட்டமிட்ட தொழில் நகரமாக உருவானது ஜாம்ஷெட்பூர். இதே போல தமிழ் நாட்டின் ஒசூர் நகரத்தை தொழில் நகரமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளது டாடா நிறுவனம். ஏற்கனவே ஒசூரில் உள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்துக்காக ஐபோன்களைத் தயாரித்து வருகிறது.
ஒசூருக்கு 40 கி.மீ தொலைவில் இந்தியாவின் ஐ.டி தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூரு அமைந்துள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த முடிவால் பெங்களூருவுக்கு நிகரான ஒரு ஐ.டி நகராக ஒசூர் நகரம் உருவாகும் அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
ஒசூரில் டிவிஎஸ், டைட்டன், அசோக் லேலாண்ட் போன்ற இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. ஒசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது அந்நகரத்தின் தொழில் வளர்ச்சிக்கு உந்துதலைத் தரும் என்று கூறப்படுகிறது.