
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2024-ல் டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கார் மாடல், இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்கிற சாதனையைப் படைத்தது.
இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு டாடா மோட்டார்ஸ், மஹேந்திரா & மஹேந்திரா, ஹோண்டா, மாருதி சுஸுகி போன்ற கார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஏறத்தாழ கடந்த 40 ஆண்டுகளாக, மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் மாடல்கள் விற்பனையில் முதல் இடத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல் விற்பனையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 2021-ல் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய டாடா பஞ்ச் (Tata Punch) கார், கடந்த ஆண்டில் மட்டும் 2.02 லட்சம் எண்ணிக்கையில் விற்று சாதனை படைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து 1.90 லட்சம் எண்ணிக்கையில் மாருதி சுஸுகியின் வேகன் ஆர் (Wagon R) கார் விற்பனையாகியுள்ளது. மூன்றாவது இடத்தில் மாருதி சுஸுகியின் எர்டிகா (Ertica) காரும், நான்காவது இடத்தில் மாருதி சுஸுகியின் பிரெஸாவும் (Brezza), ஐந்தாவது இடத்தில் ஹுண்டாய் க்ரெடாவும் (Creta) உள்ளன.
இதனால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் 40 ஆண்டுகால சாதனை ஓட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், கடந்த 2022 தரவுகளின்படி இந்திய கார் சந்தையின் சுமார் 42 சதவீத விற்பனை மாருதி சுஸுகி வசம் உள்ளது. மேலும் கடந்த ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 42.86 லட்சம் கார்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன.