டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல இந்திய தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) நேற்று உயிரிழந்தார். டாடா குடும்பத்தைச் சேர்ந்த ரத்தன் டாடா 1991 முதல் 2012 வரை டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராகப் பணியாற்றி, அக்குழுமத்தின் பல நிறுவனங்களின் வளர்ச்சியில் பங்காற்றினார்.
பார்சி மதத்தைப் பின்பற்றும் டாடா குடும்பம், இந்தியாவின் மிக முக்கியமான செல்வாக்குமிக்க வணிகக் குடும்பங்களில் ஒன்றாகும். 150 வருட பாரம்பரியத்தைக் கொண்ட டாடா குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
நூஸர்வான்ஜி டாடா (1822-1886)
டாடா குடும்பத்தின் முன்னோடி நூஸர்வான்ஜி டாடா. பார்சி மத பூசாரியாக இருந்த இவர், முதல்முறையாக தொழில் நிறுவனத்தைத் தொடங்கி டாடா குடும்பத்தின் எதிர்கால தொழில் முயற்சிகளுக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.
ஜாம்ஷெட்ஜி டாடா (1839-1904)
டாடா குழுமத்தை முறைப்படி தொடங்கிய ஜாம்ஷெட்ஜி டாடா, நூஸர்வான்ஜி டாடாவின் மகனாவார்.
இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படும் ஜாம்ஷெட்ஜி டாடா, டாடா குழுமத்தின் முக்கிய தொழில்களான டாடா ஸ்டீல்ஸ், டாடா ஹோட்டல்கள் உள்ளிட்ட தொழில்களைத் தொடங்கினார்.
டோரப்ஜி டாடா (1859-1932)
ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகனான டோரப்ஜி டாடா, தந்தையின் மரணத்துக்குப் பிறகு டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தை விரிவுபடுத்திய இவர், டாடா பவர் நிறுவனத்தைத் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றினார்.
ரத்தன்ஜி டாடா (1871-1918)
ஜாம்ஷெட்ஜி டாடாவின் இளைய மகனான ரத்தன்ஜி டாடா, பருத்தி மற்றும் ஜவுளித் தொழில்களில் டாடா குழுமம் ஈடுபடுவதில் முக்கியப் பங்காற்றினார்.
ஜெ.ஆர்.டி. டாடா (1904-1993)
ரத்தன்ஜி டாடாவின் மகனான ஜெ.ஆர்.டி. டாடா சுமார் 50 வருடங்கள் (1938-1991) டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தார்.
இவர் தொடங்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் பின்னாளில் இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டு, ஏர் இந்தியாவாக உருமாற்றம்பெற்றது.
ஒரு பன்முகத்தன்மையான பன்னாட்டு குழுமமாக, டாடா சன்ஸ் குழுமம் வளர்ச்சியடைந்ததில் முக்கியப் பங்கு வகித்தார் ஜெ.ஆர்.டி. டாடா.
நவல் டாடா (1904-1989)
ரத்தன்ஜி டாடாவின் தத்தெடுக்கப்பட்ட மகனாவார் நவல் டாடா. ரத்தன் டாடாவும், நோயல் டாடாவும் இவரது இரு மகன்கள்.
ரத்தன் டாடா (1937-2024)
நவல் டாடாவின் மூத்த மகனான ரத்தன் டாடா, 1991-ல் இருந்து 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராகப் பதவி வகித்தார்.
நோயல் டாடா (பிறப்பு 1957)
நவல் டாடாவின் இளைய மகனான நோயல் டாடா, தற்போது டாடா குழுமத்தின் டிரெண்ட் நிறுவனம் மற்றும் டாடா முதலீட்டு நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.