
அஹமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான விபத்தால், விமானத்திற்குள் இருந்த 204 பேர் உயிரிழந்தனர், 41 பேர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில்,
`ஏர் இந்தியா விமானம் 171 தொடர்பான துயர சம்பவத்தால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். இந்த நேரத்தில் நாங்கள் உணரும் துயரத்தை வார்த்தைகளால் போதுமான அளவில் வெளிப்படுத்த முடியாது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடனும், காயமடைந்தவர்களுடனும் உள்ளன’ என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், `இந்த துயரத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபரின் குடும்பங்களுக்கும் டாடா குழுமம் ரூ. 1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஏற்று, அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவும் கிடைப்பதை உறுதி செய்வோம்’ என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் உள்ளூர் சமூகத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக, விமான விபத்தில் சிக்கிய பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியை மீண்டும் கட்டித்தர டாடா குழுமம் சார்பில் உதவி செய்யப்படும் என்றும் அறிக்கை வாயிலாக அவர் உறுதியளித்தார்.