
பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பி.எம்.எம்.எல்.) சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.எஸ். கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்கத்திற்கும், அதன் நிர்வாகக் குழுவிற்கும் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நிர்வாகக் குழுவின் புதிய தலைவராக, பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மை செயலராகப் பொறுப்பு வகித்த நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பில் அவர் 5 வருடங்கள் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு, பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க உறுப்பினர்களாக 29 நபர்கள் இருந்தனர். தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள சங்கத்திற்கு 34 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பி.எம்.எம்.எல். சங்கத்தின் தலைவராக நரேந்திர மோடியும், துணைத் தலைவராக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்விணி வைஷ்ணவ், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முன்னாள் ராணுவத் தளபதி சையத் அட்டா ஹஸ்னைன், பிரபல இயக்குநர் ஷேகர் கபூர், புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர் கே.கே. மொஹமத், தேசிய அருங்காட்சியகத்தின் பொது இயக்குநர் முனைவர் பி.ஆர். மணி, தமிழகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான டி.எஸ். கிருஷ்ணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.