உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஆர். மகாதேவன் பதவியேற்பு

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மகாதேவனின் நியமனம் உச்ச நீதிமன்றத்துக்கு பன்முகத்தன்மையைக் கொண்டு வரும்
உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஆர். மகாதேவன் பதவியேற்பு
1 min read

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஆர். மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் இன்று (ஜூலை 18) பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் இருவருக்கும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், போப்பண்ணா ஆகிய இருவரும் ஒய்வு பெற்றனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜுலை 11-ல் தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட 5 மூத்த நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதிபதிகள் கோட்டீஸ்வர் சிங் மற்றும் மகாதேவன் ஆகியோர் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. கொலீஜியத்தின் பரிந்துரையை ஜூலை 16-ம் தேதி ஏற்றுக்கொண்டது மத்திய அரசு.

இன்று மகாதேவனும், கோட்டீஸ்வர் சிங்கும் பதவி ஏற்றதை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதன் முழு அளவான 34-ஐ அடைந்துள்ளது.

பிப்ரவரி 28, 2025-ல் ஓய்வு பெற உள்ள நீதிபதி கோட்டீஸ்வர் சிங் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதியாவார். இதனால் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் முன்பு, ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார் கோட்டீஸ்வர் சிங்.

மேலும் 2028 ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ள ஆர். மகாதேவன் பெயரை கொலீஜியம் பரிந்துரைத்த போது, “பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மகாதேவனின் நியமனம் உச்ச நீதிமன்றத்துக்கு பன்முகத்தன்மையைக் கொண்டு வரும்” என்று குறிப்பிட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in