
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட துணைக் கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று (வியாழக்கிழமை) பதிலளித்தார்.
அப்போது விபத்துகள் குறித்தும் விபத்துகளின் தரவுகள் குறித்தும் நிதின் கட்கரி பகிர்ந்தார்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, விபத்துகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்பது நிதின் கட்கரியின் இலக்காக இருந்தது. ஆனால், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.
இதுபற்றி அவர் கூறியதாவது:
"சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதை மறந்துவிடுங்கள். சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதை ஒப்புக்கொள்ள எனக்கு எந்தத் தயக்குமும் இல்லை. சர்வதேச கருத்தரங்குகளுக்குச் செல்லும்போது, சாலை விபத்துகள் குறித்து விவாதம் எழுந்தால், நான் என் முகத்தை மறைத்துக்கொள்ள முயற்சிப்பேன்.
இந்தியாவில் மனிதர்கள் நடந்துகொள்ளும் விதம் மாற வேண்டும். சமுதாயம் மாற வேண்டும். சட்டம் மதிக்கப்பட வேண்டும்.
போக்குவரத்து ஒழுக்கம் குறித்து மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு வகுப்பெடுக்க வேண்டியுள்ளது. குழந்தைகளுக்குக் கூட போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவம் குறித்து உணர்த்தப்பட வேண்டும்" என்றார் நிதின் கட்கரி.
இவர் நாடாளுமன்றத்தில் முன்வைத்த தரவுகள்:
ஆண்டுக்கு சராசரியாக சாலை விபத்துகளால் நேரிடும் மொத்த உயிரிழப்புகள்
1.78 லட்சம்
மொத்த உயிரிழப்புகளில் 18 முதல் 34 வயதுடையவர்கள்
60 சதவீதம்
சாலை விபத்து மரணங்களில் முதல் மூன்று மாநிலங்கள்
உத்தரப் பிரதேசம் - 23,000 உயிரிழப்புகள்
தமிழ்நாடு - 18,000 உயிரிழப்புகள்
மஹாராஷ்டிரம் - 15,000 உயிரிழப்புகள்
சாலை விபத்து மரணங்களில் முதல் மூன்று நகரங்கள்
தில்லி - 1,400 உயிரிழப்புகள்
பெங்களூரு - 915 உயிரிழப்புகள்
ஜெய்ப்பூர் - 850 உயிரிழப்புகள்