
கூட்ட நெரிசலால் வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானத்தில் அழைத்து வர துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசு.
உ.பி. மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்றார்கள். போட்டி முடிந்து சென்னை திரும்ப, கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் ஏ.சி. பெட்டியில் அவர்கள் முன்பதிவு செய்திருந்தார்கள்.
ஆனால் கும்பமேளா பயணிகளால் சம்மந்தப்பட்ட ஏ.சி. பெட்டி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாலும், ரயில் நிலையத்தில் இருந்த கூட்ட நெரிசலாலும் அவர்களால் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏறமுடியவில்லை. மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு வீரருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் திரும்ப தங்களுக்கு உதவுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைத்து அந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் பேசும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், அவர்களை விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்தது தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.
வாரணாசியில் இருந்து பெங்களூரு வழியாக அவர்கள் அனைவரும் சென்னைக்கு வரவுள்ளார்கள். தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்தபிறகு, அதற்கு நன்றி தெரிவித்து மாற்றுத்திறனாளி வீரர்கள் பேசும் மற்றொரு காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது.