
தில்லி உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழரான ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் இன்று (ஜன.8) பொறுப்பேற்றுக்கொண்டார்.
51 வயதான ஹரீஷ் வைத்தியநாதன் சங்கர், பிரபல உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், பொள்ளாச்சி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மூத்த வழக்கறிஞருமான சி.எஸ். வைத்தியநாதனின் மகனாவார். தில்லியில் இளங்கலை சட்டப்படிப்பை முடித்த ஹரிஷ் வைத்தியநாதன், இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் சட்ட மேல்படிப்பை முடித்தார்.
உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார் ஹரிஷ் வைத்தியநாதன். மேலும், பிரபல வழக்கறிஞர்கள் சோலி சொரப்ஜி, கே.கே. வேணுகோபால் ஆகியோரிடம் பணியாற்றியுள்ள ஹரிஷ் வைத்தியநாதன், மத்திய அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக ஹரிஷ் வைத்தியநாதன் சங்கரும், அஜய் டிக்பாலும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருக்கும் தில்லி உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி விபு பாக்ரூ பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதனை அடுத்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே தில்லியில் அமைந்துள்ள உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன், ஆர். மகாதேவன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.