கங்கனா பற்றி அவதூறு கூறிய சுப்ரியாவுக்குத் தேர்தல் டிக்கெட் மறுப்பு

கங்கனா பற்றி அவதூறு கூறிய சுப்ரியாவுக்குத் தேர்தல் டிக்கெட் மறுப்பு
ANI

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத், உத்தரப் பிரதேச மாநிலம், மஹராஜ்கஞ்ச் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தேர்தல் டிக்கெட் வழங்க மறுத்துவிட்டது.

14 வேட்பாளர்கள் கொண்ட எட்டாவது பட்டியலை காங்கிரஸ் நேற்று அறிவித்தது. அதில் சுப்ரியாவின் பெயர் இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் வீரேந்திர செளதுரி என்பவரை காங்கிரஸ் அத்தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்துள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில், சுப்ரியா, மகராஜ்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

 காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான சுப்ரியா ஸ்ரீநாத், சமீபத்தில் ஹிமாச்சல மாநிலம், மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் குறித்து அவதூறான கருத்துக்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் அதை அழித்துவிட்டார். தாம் அதுபோன்ற கருத்துக்களை வெளியிட வில்லை என்றும் யாரோ தமது பக்கத்தில் ஊடுவி அந்தக் கருத்துக்களை வெளியிட்டதாகவும் சுப்ரியா, பின்னர் விளக்கம் அளித்திருந்தார்.

இதனிடையே கங்கனா பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட சுப்ரியாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மார்ச் 29, மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது.

 சுப்ரியாவின் செயல் அருவருக்கத்தக்க வகையிலும்  தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் இருந்த்தாகவும் அரசியல் கட்சியினர் கண்ணியமான முறையில் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

 காங்கிரஸ் இதுவரை 208 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா போட்டியிடும் குணா தொகுதியில் அவரை எதிர்த்து ராவ் யதுவேந்திர சிங் நிறுத்தப்பட்டுள்ளார். இதேபோல விதிஷா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் செளஹானுக்கு எதிராக காங்கிரஸ் பிரதாப் பானு சர்மாவைக் களத்தில் இறக்கியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in