கெடு விதித்த உச்ச நீதிமன்றம்: போராட்டத்தைக் கைவிட மறுத்த மருத்துவர்கள்

போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்குத் திரும்புமாறு கோரிக்கை விடுத்து, மருத்துவர்களைப் பேச்சு வார்த்தைக்கும் அழைத்தார் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி
கெடு விதித்த உச்ச நீதிமன்றம்: போராட்டத்தைக் கைவிட மறுத்த மருத்துவர்கள்
PRINT-83
1 min read

இன்று (செப்.10) மாலை 5 மணிக்குள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்குத் திரும்புமாறு மேற்கு வங்க மருத்துவர்களுக்குக் கெடு விதித்தது உச்ச நீதிமன்றம். ஆனால் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மருத்துவர்கள்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் நடந்த பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க மாநிலம் முழுவதும் உள்ள இளநிலை மருத்துவர்கள் மருத்துவப் பணிகளை மேற்கொள்ளாமல் காலவரையின்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மருத்துவர்களின் தொடர் போராட்டத்தால் மேற்கு வங்கத்தில் அத்தியாவசிய மருத்துச் சேவைகள் கிடைப்பதில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தகுந்த சிகிச்சை கிடைக்காததால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இறந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது மாநில அரசு. இதை அடுத்து நேற்று பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொண்டது உச்ச நீதிமன்றம்.

விசாரணையின்போது, நாளை (செப்.10) மாலை 5 மணிக்குள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு மருத்துவர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பவேண்டும் என்றும், இத்தனை நாட்களாகப் போராடிய அவர்கள் மீது துறைரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதியளித்தது உச்ச நீதிமன்றம்.

ஒரு வேளை மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கருத்து தெரிவித்தது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்குத் திரும்புமாறு கோரிக்கை விடுத்து, அவர்களைப் பேச்சு வார்த்தைக்கும் அழைத்தார் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி.

ஆனால் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும், அதுவரை பேச்சுவார்த்தை மேற்கொள்ள முடியாது எனவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநில சுகாதார செயலரும், சுகாதாரக் கல்வி இயக்குநரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளாக உள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in