
1971-க்கு முன்பு இந்தியாவுக்கு வருகை தந்த வங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் வகையில், இந்திய குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் செல்லும் என இன்று (அக்.17) தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு.
இன்றைய வங்கதேசம், 1971-க்கு முன்பு கிழக்கு பாகிஸ்தான் என்று அறியப்பட்டிருந்தது. அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் வசித்துவந்த லட்சக்கணக்கான மக்கள் 1966-ல் இருந்து அடைக்கலம் தேடி இந்திய பகுதிக்குள் வரத்தொடங்கினர். மிகவும் குறிப்பாக அம்மக்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 26, 1971-ல் இந்தியாவுக்கும், அன்றைய மேற்கு பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற போரின் முடிவில் கிழக்கு பாகிஸ்தான் பகுதி, `வங்கதேசம்’ என்ற புதிய நாடாக உருமாற்றம் கண்டது.
இதன் பிறகு, 1966 ஜனவரி 1-ல் இருந்து 1971 மார்ச் 25 வரை இந்தியாவுக்குள் அடைக்கலம் தேடி வந்த அன்றைய கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த வங்கதேச மக்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சட்டப்பிரிவு 6A சேர்க்கப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம் அஸ்ஸாம் மக்கள்தொகையின் சமநிலை பாதிக்கப்படும் எனவும், மேலும் இதனால் அஸ்ஸாமைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களின் அரசியல் மற்றும் கலாச்சார உரிமைகள் பாதிக்கப்படும் எனவும் கூறி, இந்த 6A சட்டப்பிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 5 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், எம்.எம். சுந்தரேஷ், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் 6A சட்டப்பிரிவு செல்லும் எனவும், நீதிபதி ஜெ.பி. பர்திவாலா 6A சட்டப்பிரிவு செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இதனால் 6A சட்டப்பிரிவின் மூலம் இந்திய குடியுரிமை பெற்ற அன்றைய கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த வங்கதேச மக்களின் குடியுரிமை நீடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அதே நேரம் 25 மார்ச் 1971-க்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.