

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்குப் பிணை வழங்கிய அலஹாபாத் உயர் நீதிமன்ற உத்தரவைக் கண்டு உச்ச நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது.
11 வயது சிறுமியின் மார்பைில் கை வைத்ததாகவும் அவருடைய ஆடையைக் கிழித்து பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்ததாகவும் இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாலியல் வன்கொடுமை குற்றத்தில் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை எதிர்த்து இருவரும் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்.
இந்த வழக்கை விசாரித்த அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோஹர் நாராயண் மிஸ்ரா கடந்த மார்ச் 17-ல் பிறப்பித்த உத்தரவில், "மார்பைத் தொடுவதும் ஆடைகளைக் கிழிப்பதும் பாலியல் வன்கொடுமையாகவோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சியாகவோ கருதப்படாது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தத் தீர்ப்பு தேசிய அளவில் பேசுபொருளானது.
இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை நிறுத்திவைத்தது. மேலும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சிறுமியின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் முறையீடும் செய்திருந்தார்.
இந்நிலையில், அலஹாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் மீண்டும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
தில்லியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்குப் பிணை வழங்கிய அலஹாபாத் உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண், பிரச்னையைத் தாமாக வரவழைத்தாகக் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பைப் பிறப்பித்தது உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங்.
இந்தத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தை அதிருப்தியடையச் செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் ஏஜி மசி கூறுகையில், "வேறொரு நீதிபதியால் வேறொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம், பிணை வழங்கப்பட்டது. ஆனால், அப்பெண்ணெ தாமாகப் பிரச்னையை வரவழைத்துக்கொண்டதாகக் கூறுவதெல்லாம் என்ன உரையாடல்? இதுமாதிரியான விஷயங்களையெல்லாம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நீதித் துறையைச் சேர்ந்தவர்கள்" என்றார்கள்.
முன்பு தாமாக முன்வந்து விசாரித்த வழக்கோடு இதையும் இணைத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.