
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி பாஜக தலைவர் உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனுவை அக்டோபர் 10 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஒப்புக்கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை நடத்தினார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சிபிஐ விசாரணை கோரி பாஜக தலைவர் உமா ஆனந்தன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள் எம் தண்டபானி மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இது விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் சம்பவம் தொடர்புடைய தமிழ்நாடு காவல் துறையினரின் விசாரணை தொடக்க நிலையில் உள்ளது என்றும் சிபிஐ விசாரணை கோரும் மனுதாரர் கரூர் கூட்டநெரிசலால் பாதிக்கப்பட்டவர் கிடையாது என்றும் நீதிமன்றம் கருதியது.
"பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்தால், நாங்கள் பாதுகாப்போம். நீங்கள் யார்? நீதிமன்றத்தை அரசியல் களமாக்க வேண்டாம். விசாரணை தவறான கோணத்தில் செல்லும்பட்சத்தில் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம். விசாரணையானது தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளது" என்று கூறி சிபிஐ விசாரணை கோரிய மனுவை நிராகரித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து பாஜக தலைவர் உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், சிபிஐ விசாரணை கோரும் இந்த மனுவை அக்டோபர் 10 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகப் பட்டியலிட்டுள்ளார்.
Karur Stampede | Karur | Supreme Court | TVK Vijay | TVK |