மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் கடந்த 9 அன்று இறந்த நிலையில் கிடந்தார். பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் நாடு முழுக்கப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் துறை ஒருவரைக் கைது செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரின் பெற்றோர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், கொல்கத்தா காவல் துறை மீது திருப்தியின்மையை வெளிப்படுத்திய கொல்கத்தா உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ வசம் மாற்றி கடந்த 13-ல் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜெபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகஸ்ட் 20-ல் விசாரிக்கிறது.