குழந்தைகள் தொடர்புடைய ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பை இன்று (செப்.23) ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
கடந்த வருடம் சென்னையில் உள்ள அம்பத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் அவரது கைப்பேசியில் குழந்தைகள் தொடர்புடைய ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது.
தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜரான அந்த இளைஞர், தான் ஆபாசப் படங்களைப் பார்த்ததாக ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது சட்டப்படி தவறு அல்ல, ஆனால் அந்தப் படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் குற்றம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அம்பத்தூர் இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்தார். மேலும் இத்தகைய நபர்களை தண்டிப்பதைவிட அவர்களைத் திருத்துவதற்கு சமூகம் முயற்சிசெய்ய வேண்டும் என்றும் தன் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இதை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 11-ல் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜெ.பி. பர்திவாலா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. அப்போது நீதிபதி ஆனந்த வெங்கடேஷின் தீர்ப்பு மிகவும் கொடுமையானது என்று கருத்து தெரிவித்திருந்தார் தலைமை நீதிபதி.
இந்நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு. தீர்ப்பில், தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷின் கருத்துகளையும், தீர்ப்பையும் தவறு என்று குறிப்பிட்டு அவர் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதாக அறிவித்தது உச்ச நீதிமன்ற அமர்வு.
மேலும், child pornography (குழந்தைகள் ஆபாசப்படம்) என்று சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தைகளை மாற்றி, அதற்குப் பதில் child sexual and exploitive and abusive material என்ற வார்த்தைகளையே இனி பயன்படுத்தவேண்டும் எனவும், இது தொடர்பாக உடனடி அவசர சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு.