டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்: உச்ச நீதிமன்றம் | ED |

அமலாக்கத்துறையிடம் சரமாரியாகக் கேள்வி கேட்ட நிலையில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உத்தரவு...
டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்: உச்ச நீதிமன்றம் | ED |
1 min read

சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்து சோதனை செய்துவிடுவீர்களா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று அமலாக்கத்துறையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டது, உரிமம் வழங்குவதற்கு லஞ்சம் பெற்றது என்பது உள்ளிட்ட புகார்களில் ரூ. 1000 கோடி மோசடி நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 41 வழக்குகளைப் பதிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

அதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதையடுத்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், “டாஸ்மாக் அரசு நிறுவனத்தில் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அமலாக்கத்துறை தனிப்பட்ட முறையில் அவரிடம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். எந்த வழிமுறையும் பின்பற்றப்படாமல் அமலாக்கத்துறை அரசின் முக்கிய அலுவலகத்தில் சோதனை நடத்தி கணினிகள் உள்ளிட்ட முக்கிய தரவுகளைப் பறிமுதல் செய்துள்ளார்கள்.

இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “டாஸ்மாக் விவகாரங்களில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 47-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அதனால்தான் பண மோசடி என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டோம். அதன் ஒரு பகுதியாகவே சோதனை நடத்தப்பட்டது” என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,

“சந்தேகம் இருந்தாலே அரசு நிறுவனத்திற்குள் நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் சென்றுவிடுவீர்களா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இது மாநிலத்தின் உரிமையின் மீதான அத்துமீறலாகத் தெரியவில்லையா? கூட்டாட்சிக் கட்டமைப்பு எங்கே போனது? கடந்த ஆறு ஆண்டுகளாக அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்குகளைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அதைப்பற்றி இப்போது எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. தனிநபர் மீது நீங்கள் நேரடி சோதனைகளை நடத்தலாம். ஆனால் அரசு அமைப்பின் மீது இப்படித் தன்னிச்சையாக நடந்துகொள்ள முடியுமா? அமலாக்கத்துறை அனைத்து எல்லைகளையும் மீறுகிறது” என்று கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை தொடரும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in