
எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினாலும் இடைத்தேர்தல் நடைபெறாது என்று தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் முதல்வர் ரேவந்த ரெட்டி பேசியது, அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையை ஏளனம் செய்யும் செயல் என்று கூறி அதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
119 இடங்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு கடந்த 2023-ல் தேர்தல் நடைபெற்றது. இதில் 64 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதிக்கு 39 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்நிலையில், பாரத் ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த ஏறத்தாழ 10 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்கள்.
இதைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தெலங்கானா சபாநாயகரிடம் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மனு மீது இதுவரை சபாநாயகர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் காலதாமதம் செய்யும் தெலங்கானா சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து, பாரத் ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.ஜி. மாசிஹ் அமர்வு விசாரித்தது.
அப்போது, பாரத் ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஏ. சுந்தரம்,
`இடைத்தேர்தல்கள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் கவலைப்படவேண்டாம் என்று உங்கள் வாயிலாக நான் தெரிவிக்க விரும்புகிறேன். இடைத்தேர்தல் நடைபெறாது. அவர்கள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினாலும் இடைத்தேர்தல் நடைபெறாது’ என்று முதல்வர் ரேவந்த ரெட்டி தெலங்கானா சட்டப்பேரவையில் பேசியதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அதன்பிறகு இது தொடர்பாகப் பேசிய நீதிபதி பி.ஆர். கவாய், `சட்டப்பேரவையில் இவ்வாறு கூறியிருந்தால், முதல்வர் 10-வது அட்டவணையை ஏளனம் செய்கிறார் என்று பொருள். மீண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று நீங்கள் எச்சரிப்பது நல்லது. அவமதிப்பு நோட்டீஸ் வெளியிடுவதை தாமதப்படுத்தினாலும், நாங்கள் அதிகாரமற்றவர்கள் அல்ல’ என்றார்.
இதைத் தொடர்ந்து, 10 மாதங்களுக்கும் மேலாக இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து தெலங்கானா சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.