
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடி, கைது நடவடிக்கையிலிருந்து இடைக்கால நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சமய் ரைனா யூடியூப் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ரன்வீர் அல்லாபாடியா, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்து சமூக ஊடகங்களில் அதிகம் பரவியது. தனது கருத்துக்கு ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பும் கோரினார்.
எனினும், ரன்வீர் அல்லாபாடியா மீது மஹாராஷ்டிர சைபர் பிரிவு, குவஹாத்தி மற்றும் ஜெய்ப்பூரில் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றுக்கு எதிராக ரன்வீர் அல்லாபாடியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவருடை மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கோட்டீஸ்வர் சிங் விசாரித்தார்கள்.
வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:
"தாம் மிகவும் பிரபலம் என்பதற்காக ஒருவர் எந்த மாதிரியான வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் பேசலாமா? ஒட்டுமொத்த சமூகமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இதுமாதிரியான ஒரு மொழியை உலகில் யார் தான் விரும்புவார்கள்? உங்களுடையச் சிந்தனையில் நிறைய அசுத்தம் இருந்துள்ளது. அதுதான் இப்படி குப்பையாக வந்து விழுந்துள்ளது.
பேச்சுரிமை என்ற பெயரில், சமூகத்துக்கு எதிரான அம்சங்களுக்கு எதிராக எதையும் பேச யாருக்கும் உரிமை கிடையாது. நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளை எண்ணி நாட்டிலுள்ள மகள்கள், சகோதரிகள், பெற்றோர்கள், ஏன் சமூகமே வெட்கித் தலைகுனியும். இது அருவருப்பானது அல்ல என்றால், வேறு எதுதான் அருவருப்பு மிக்கது. நாங்கள் ஏன் உங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைக்கக் கூடாது."
இருந்தபோதிலும், கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு வழங்கி ரன்வீர் அல்லாபாடியாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கொண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், இவர் கைது செய்யப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரன்வீர் அல்லாபாடியா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபினவ் சந்திரசூட், தனது மனுதாரர் மற்றும் அவருடையக் குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வாதாடினார்.
மஹாராஷ்டிரம் மற்றும் அஸ்ஸாம் காவல் துறையை அணுகி பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ரன்வீர் அல்லாபாடியா தானே காவல் நிலையத்தில் கடவுச் சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.