
2,000 கி.மீ.க்கும் அதிகமான இந்தியப் பகுதி சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்பு கூறியதற்கு உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (ஆக. 4) கண்டனம் தெரிவித்து, `உண்மையான இந்தியர் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தமாட்டார்’ என்று கூறியுள்ளது.
அதேநேரம், அவரது பேச்சுடன் தொடர்புடைய அவதூறு வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.
2,000 சதுர கி.மீ. பரப்பளவிலான இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், சீனப் படைகள் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய வீரர்களைத் தாக்குவதாகவும், கடந்த 2022 பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராஜஸ்தானில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறினார்.
இதைத் தொடர்ந்து, அவரது இந்த கூற்றை எதிர்த்து உத்தர பிரதேசத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அவதூறு வழக்கை எதிர்த்து அலஹாபாத் உயர் நீதிமன்றத்தை ராகுல் காந்தி அணுகினார். ஆனால் கடந்த மே 29 அன்று அவரது கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
அதன்பிறகு அவதூறு வழக்கை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை இன்று (ஆக. 4) விசாரித்த நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, `சீனர்களால் 2,000 கி.மீ. ஆக்கிரமிக்கப்பட்டது பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேள்வி எழுப்பியது.
மேலும், `நீங்கள் ஒரு உண்மையான இந்தியராக இருந்தால், அப்படிப் பேசியிருக்கமாட்டீர்கள்’ என்று நீதிபதிகள் கூறினார்கள்.
அத்துடன், `எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நீங்கள் ஏன் இப்படிக் கூறுகிறீர்கள்? நாடாளுமன்றத்தில் இந்தக் கேள்விகளை எழுப்பியிருக்கலாமே?’ என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு அவருக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதைத் தொடர்ந்து, அவதூறு வழக்கு குறித்து உ.பி.யில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.