
நீதித்துறையில் தொடக்க நிலை பதவியான முன்சிஃப் மாஜிஸ்திரேட் பணியில் சேர விரும்புவர்கள், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞர்களாகப் பயிற்சி பெற்றிருக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (மே 20) தீர்ப்பளித்தது.
இதன்மூலம் 2002-ம் ஆண்டில் நீக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதியை தற்போது உச்ச நீதிமன்றம் மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது.
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் ஏ.ஜி. மசிஹ் மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, புதிய சட்ட பட்டதாரிகளை எந்த நடைமுறை அனுபவமும் இல்லாமல் நீதித்துறை பணியில் அனுமதிப்பது, `பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளது’ என்று குறிப்பிட்டது.
`சிவில் நீதிபதிகள் (இளநிலை பிரிவு) தேர்வை எழுதுவதற்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பயிற்சி தேவை என்று நாங்கள் கருதுகிறோம்... சிவில் நீதிபதிகள் தேர்வை எழுதும் எந்தவொரு தேர்வரும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றிருப்பதை உறுதிசெய்ய அனைத்து மாநில அரசுகளும் விதிகளைத் திருத்தவேண்டும்’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
`கடந்த 20 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட வழக்கறிஞர் பயிற்சி இல்லாமல் புதிய சட்ட பட்டதாரிகளை நீதிபதிகளாக நியமித்தது வெற்றிகரமான அனுபவமாக இருக்கவில்லை. இதுபோன்ற புதிய சட்ட பட்டதாரிகள் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளனர்’ என்று தீர்ப்பின் பின்னணியில் உள்ள நியாயத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியது.
தேர்வர்களின் சட்டப் பயிற்சி அனுபவம் குறித்து, 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற வழக்கறிஞர்கள் சான்றளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு எதிர்கால ஆட்சேர்ப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சேர்ப்புகளுக்குப் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.