மனுதாரரின் மகள்கள் இருவரும் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே ஈஷா யோகா மையத்தில் இருப்பதாகக் கூறி, ஈஷா யோகா மையத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்கு சென்ற தனது மகள்கள் இருவர் மூளைச் சலவை செய்யப்பட்டதாகவும், அங்கேயே தங்கியிருக்கும் மகள்கள் இருவரை மீட்டுத் தருமாறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பேராசிரியர் காமராஜ் என்பவரால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஈஷா யோகா மையம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜேபி பரித்வாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்தது.
ஈஷா யோகா மையத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்தத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்களிடம் காணொளி வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விருப்பத்தின் பெயரிலேயே அந்தப் பெண்கள் ஈஷா யோகா மையத்தில் இருப்பதாகக் கூறிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அக்டோபர் 3 அன்று காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவின்படி, ஆலாந்துறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் காணாமல் போனதாக 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த 6 வழக்குகளில் 5 வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன. காணாமல் போனவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் ஒரு வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
பிரிவு 174-ன்(தற்கொலை குறித்த காவல் துறை விசாரணை) கீழ் மேலும் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரு வழக்குகளில் தடயவியல் ஆய்வு முடிவுக்காக விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.
ஈஷா யோகா மையத்தில் இருக்கும் இரு பெண்கள் தொடர்புடைய ஆட்கொணர்வு மனுவைப் பொறுத்தவரை, அவர்கள் இருவரும் தங்களுடைய சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அங்கு உள்ளார்கள். சீரான இடைவெளியில் பெற்றோர்களுடன் தொடர்பிலிருந்து வருகிறார்கள்.
மேலும், யோகா மையத்தில் தகன மண்டபம் உள்ளது. எனினும், இதை நீக்கக் கோரி எஸ்என் சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதவிர ஈஷா யோகா மையம் தொடர்புடைய மற்ற வழக்குகள் என சில வழக்குகளையும் காவல் துறை பட்டியலிட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் இரு மகள்களும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் விருப்பத்தின் பெயரிலேயே அவர்கள் ஈஷா யோகா மையத்தில் உள்ளார்கள் என்று கூறிய உச்ச நீதிமன்றம், ஆட்கொணர்வு மனு மீது மேற்கொண்டு நடவடிக்கைகள் தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஷா யோகா மையத்துக்கு எதிராக இங்கு விசாரிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்புடைய வழக்கு மட்டுமே முடித்துவைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம், மற்ற வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளத் தடை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.