தேர்தல் பத்திர எண்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு எந்த தேதியில் பத்திரங்கள் வழங்கியது என்கிற தகவல் வெளியிடப்படவில்லை.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ANI

தேர்தல் பத்திர எண்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் முறை சட்டவிரோதமானது என்றும், இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15-ல் தீர்ப்பளித்தது. தேர்தல் பத்திரங்கள் முறையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அனைத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும்படி எஸ்பிஐ-க்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் தேவை என எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. எனினும், உச்ச நீதிமன்றம் இதை நிராகரித்தது. செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அனைத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தாக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இத்தகவல்களை தேர்தல் ஆணையமும் இணையத்தளத்தில் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயர்களும் தொகையும் வெளியிடப்பட்டன. ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தமாக 22 நிறுவனங்கள் ரூ. 100 கோடிகளுக்கும் மேலாகத் தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளன. அதேபோல எந்தக் கட்சி அதிகத் தொகையைத் தேர்தல் பத்திரங்கள் வழியாகப் பெற்றது என்கிற விவரமும் தெரிவிக்கப்பட்டன.

2019 முதல் கடந்த ஜனவரி மாதம் வரை, கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனம் இதுதான். ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ. 966 கோடிக்குத் தேர்தல் பத்திரங்களை வாங்கி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

எனினும் எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு எந்த தேதியில் பத்திரங்கள் வழங்கியது என்கிற தகவல் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தேர்தல் பத்திர எண்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in