`மத வேறுபாடின்றி சாலைகள், நீர் நிலைகள், ரயில் பாதைகள் போன்ற பொது இடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வழிபாட்டு இடங்களை இடிக்க வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம்’ என கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
புல்டோசர்களை உபயோகித்துத் தீவிரமான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை இடிக்கும் நடைமுறை சில மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. இதில் உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் சார்பாக ஆஜரானார் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா. அவரிடம், கிரிமினல் குற்றவாளிகளாக இருப்பது புல்டோசர் நடவடிக்கை பாய்வதற்கான அளவுகோலாக இருக்கிறதா, என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.
இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா `இல்லை, பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம் போன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் நபர்களுக்குச் சொந்தமான கட்டடங்கள் கூட புல்டோசர்களால் இடிக்கப்படுவதில்லை’ என்றார். மேலும், குறிப்பிட்ட ஒரு சமூகம் குறிவைக்கபடுவதாக வெளியாகும் சில நிகழ்வுகளின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதாக கவலை தெரிவித்தார் துஷார் மேத்தா.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், `சாலைகள், நீர் நிலைகள், ரயில் பாதைகள் போன்ற பொது இடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வழிபாட்டு இடங்களை இடிக்க வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
புல்டோசர் நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புக்கு எதிரான உத்தரவுகள் போன்றவை மதத்தைத் தாண்டி அனைத்து குடிமக்களுக்கும் பொதுவானது. சட்டவிரோதமான கட்டுமானங்களுக்கு எதிராக மதம், நம்பிக்கைகள் சார்பு இல்லாமல், ஒரே ஒரு சட்டம் இருக்க வேண்டும்’ என்றனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றங்களின் அனுமதியின்றி அக்.1 வரை கட்டடங்களை புல்டோசர் வைத்து இடிக்க நாடு முழுவதும் தடை விதித்து கடந்த செப்.17-ல் பிறப்பித்த உத்தரவை, மீண்டும் நீட்டித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு.