
மேற்கு வங்கத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் பணி நியமன ஆணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016-ல் மேற்கு வங்க பள்ளிக் கல்வி பணியாளர் தேர்வாணையம் மூலம் பள்ளிகளுக்கான 24,640 காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவில் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 23 லட்சம் தேர்வர்கள் இதில் கலந்துகொண்டார்கள். 24,640 காலிப் பணியிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 25,753 பேருக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியல் அல்லாதோருக்கானப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்தப் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பணம் கொடுத்தவர்களுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டன.
25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணி நியமன ஆணையை ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெளிவான காரணங்களின்றி ஆசிரியர்களின் பணி நியமன ஆணையை ரத்து செய்ததாகக் குறிப்பிட்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
கடந்தாண்டு மே மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணையைத் தொடர அனுமதி வழங்கியது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட எவ்விதக் காரணம் தென்படவில்லை என்று கூறியது. இதன்மூலம், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணி நியமன ஆணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், புதிய பணியாளர் தேர்வு நடைமுறையை மூன்று மாதங்களில் நிறைவு செய்ய மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 2016-ல் பணிநியமன ஆணையைப் பெற்றவர்கள் புதிய தேர்வு நடைமுறையில் தேர்ச்சி பெற்றால், 2016-க்கு பிறகு ஊதியமாகப் பெற்ற தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டாம். இதில் தேர்ச்சி பெறாதவர்கள் 2016-ல் பணிநியமன ஆணையைப் பெற்ற பிறகு ஊதியமாகப் பெற்ற தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவர்கள் தற்போதைய பணி நியமனத்தின் மூலம் பணியைத் தொடரலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.
"இந்திய குடிமகளாக எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. நீதிபதிகள் மீதான மிகுந்த மரியாதையுடனே இந்தத் தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதாபிமான கண்ணோட்டத்தில் நான் என் கருத்தை வெளிப்படுத்துகிறேன்" என்றார் மமதா பானர்ஜி. இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கு வங்க அரசு அமல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.