
தில்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய இடைக்கால மனு மீதான தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (ஆக. 14) ஒத்திவைத்துள்ளது.
கடந்த ஆக. 11 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
அப்போது இந்த விவகாரத்தில் தில்லி மாநகராட்சியின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கி, மாநகராட்சி நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.
`நாடாளுமன்றம் விதிகளையும் சட்டங்களையும் இயற்றுகிறது, ஆனால் அவை செயல்படுத்தப்படுவதில்லை. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. இதற்காக அவர்கள் பொறுப்பேற்கவேண்டும்’ என்று நீதிபதிகள் கூறினார்கள்.
தில்லி அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் தொற்றால் குழந்தைகள் இறக்கின்றனர் என்றும், தெருநாய்கள் பிரச்னை தீர்க்கப்படவேண்டும் அதை எதிர்க்கக்கூடாது என்றும் கூறினார்.
மேலும், `யாரும் விலங்குகளை வெறுப்பவர்கள் அல்ல’ என்று குறிப்பிட்ட துஷார் மேத்தா, நாட்டில் ஒரு வருடத்தில் 37 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நாய்களை பராமரிக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நிலைமை மிகவும் தீவிரமானது என்றும், இந்த விவகாரம் குறித்து ஆழமான முறையில் விசாரணை நடத்தவேண்டும் என்றும் வாதங்களை முன்வைத்தார்.
குறிப்பாக, ஆகஸ்ட் 11 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சில உத்தரவுகளுக்கு தடை விதிக்குமாறு நீதிபதிகளிடம் சிபல் கோரினார். ஆனால் நீதிபதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
`ஒருபுறம் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள், மறுபுறம் விலங்கு பிரியர்களும் இங்கே இருக்கிறார்கள். இடைக்கால மனுவைத் தாக்கல் செய்த அனைவரும் இந்த வழக்கில் பொறுப்பேற்கவேண்டும்’ என்று கூறிய நீதிபதிகள் இடைக்கால மனு மீதான தீர்ப்பிற்கான தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.