
இஸ்லாமிய பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தொடர்புடைய ஒரு விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்.) தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஆக. 19) தள்ளுபடி செய்தது.
21 வயது இஸ்லாமிய ஆணும், 16 வயது இஸ்லாமிய பெண்ணும் மேற்கொண்ட காதல் திருமணம், முஸ்லிம் தனிநபர் சட்ட விதிகளின் கீழ் செல்லுபடியாகும் என்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ், ஒரு பெண் பருவமடைந்தவுடன் அல்லது குறைந்தபட்சம் 15 வயது நிரம்பியவுடன் திருமணத்தில் ஈடுபடலாம் என பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குழந்தை திருமண தடைச் சட்டம், 2006 மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (POCSO) ஆகியவற்றுக்கு முரணானது என்று கூறியது.
ஏனென்றால் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடுவதை இந்த தீர்ப்பு அனுமதித்துள்ளதாக அதன் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பி.வி. நாகர்தனா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
அப்போது, `சமூகத்தின் எதார்த்தத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும். இப்போதெல்லாம், பெண்கள் பள்ளியிலோ அல்லது ஆண்கள் பள்ளியிலோ மட்டுமே யாரும் இருப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் பெண்களும் ஆண்களும் ஒன்றாக இருக்கிறார்கள் - நாம் கூட்டுக் கல்வி என்று அழைக்கிறோம். அனைவருக்கும் கல்வி சுதந்திரம் உள்ளது.
தற்போது அவர்கள் ஒருவருக்கொருவர் உணர்வுகளை வளர்த்துக் கொண்டுள்ளனர், காதலிப்பதை குற்றம் என்று சொல்ல முடியுமா?’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.
குறிப்பாக, `உயர் நீதிமன்றம் இரண்டு குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளித்தால், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் அத்தகைய உத்தரவை எவ்வாறு எதிர்க்க முடியும்?’ என்று நீதிபதி நாகரத்னா கேள்வி எழுப்பினார்.
விசாரணைக்குப் பிறகு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற அமர்வு, சம்மந்தப்பட்ட ஆண் மற்றும் சிறுமி இருவரின் ஒப்புதலுடன் திருமணம் நடந்ததாக தீர்ப்பில் குறிப்பிட்டது.