யஷ்வந்த் வர்மா வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

யஷ்வந்த் வர்மா வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி மீது குற்றவியல் வழக்கைத் தொடர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் கட்டாயம்.
Published on

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்புடைய வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் வசித்து வருகிறார். கடந்த மார்ச் 14 அன்று யஷ்வந்த் வர்மா வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்காக வந்த தீயணைப்பு வீரர்கள் நீதிபதியின் வீட்டில் ஏராளமான பணம் இருந்ததைக் கண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதுதொடர்பாக, மூன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

இதனிடையே, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது தில்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா கேட்டுக்கொண்டார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, "உங்களுடைய மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. பதிவாளரிடமிருந்து வழக்கு விசாரணை தேதி தெரிவிக்கப்படும்" என்றார்.

உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி மீது குற்றவியல் வழக்கைத் தொடர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் கட்டாயம்.

logo
Kizhakku News
kizhakkunews.in